தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3500ஐ கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்வித தீவிர சிகிச்சையும் அளிக்க வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. இதனால் நோய் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் தவிர, மற்றவர்களை வீட்டில் தனிமைப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை இயக்குநர் கரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, கரோனா தொற்றுக்கான சிறிய மற்றும் சாதாரண அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவர் பரிசோதனை செய்த பின்னர், வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கலாம்.
நோய் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தனியாக இருப்பதற்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருந்தால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம். தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி, ’ஹைட்ரோ குளோரோகுயின்’ மாத்திரையை வழங்கலாம். கரோனா பாதித்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஜிங்க் (zinc), வைட்டமின் மாத்திரைகளையும், நில வேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும்.
'ஆரோக்கிய சேது' மொபைல் ஆப் டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். மருத்துவக் குழுவினர் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புபவரிடம், அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதிப் பெற வேண்டும்.