ஆண்டுதோறும்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசுத்தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பணம், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 26 ஆம் தேதி அறிவித்து, 29 ஆம் தேதி அத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி 2.5 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறும் இத்திட்டத்திற்காக, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பிற்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் பணியும் நடைபெற்றது.
அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 1,000 ரூபாயை நியாய விலைக் கடைகளில் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. விடுபட்ட பயனாளர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், 1.86 கோடி அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்காக 1867.72 கோடி நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியில் முதல் கட்டமாக, 1677 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை கூட்டுறவு வங்கி கணக்கில் தமிழக அரசு செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகை பின்னர் வரவு வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர்!