கரோனா பரவலையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வேலைவாய்ப்பற்று இருந்த லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாகவும், அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தொடர்வண்டிகள் மூலமாகவும் திரும்பினர். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாடு திரும்புவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அரசு வெளியிட்டுள்ளது. அதில், தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர விரும்பும் ஒவ்வொரு நிறுவனம் / மனிதவள முகவர், ஊழியர்களின் பெயர், குடியிருப்பு முகவரி, ஆதார் எண், கைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளித்து இ-பாஸ் மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஆராய்ந்து ஒப்புதல் அளிப்பார்.
மனிதவள நிறுவன செலவிலேயே தொழிலாளர்கள் அழைத்துவரப்பட வேண்டும். வாகனங்களில் அழைத்து வரும்போது, வண்டியில் ஏறும் முன் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு சோதிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்ததும், அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களின் செலவில், ஆர்டி-பிசிஆர் முறையில் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ள வேண்டும்.