பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்குவதையொட்டி, சிறப்புப்பள்ளியில் பயிலும் 10, 11ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், தேர்வில் கலந்துகொள்வதற்காக அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதன்படி, சிறப்புப்பள்ளி மாணவர்கள் தேர்வு காலத்திற்கு ஒரு வாரம் முன்பாகவே, தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத் துறை மூலம் 49 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் அரசு, அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவர். மாணவர்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் பயணிக்கலாம்.
அதன்படி, மாணவர்கள் ஜூன் 8ஆம் தேதியன்று காலை 08.00 மணிக்கு புறப்பட்டு, தாங்கள் கல்வி பயிலும் நிறுவனங்களின் விடுதிகளுக்குச் சென்றடைவர். மீண்டும் தேர்வு முடிந்த அடுத்த நாளான ஜூன் 26ஆம் தேதியன்று காலை 08.00 மணிக்கு புறப்பட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகள் புறப்பாடு, வந்து சேரும் இடம், அவரவர் சொந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகும்.
மாணவர்களுக்கு இந்த சிறப்புப் பேருந்துகளின் வருகை நேரம், புறப்படும் நேரம் ஆகியவை குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும். உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்ல வேண்டும்.
பயணத்திற்கு முன்பு மாணவர்கள், பெற்றோர் ஆகியோரது உடல்நிலையை சோதிக்க வேண்டும். தகுந்த இடைவெளியுடன் பேருந்து இருக்கையில் அமரவைக்க வேண்டும். அரசு அறிவுறுத்தியபடி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீடு, தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்