பேரிடர்களை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதன் ஒரு கட்டமாக இன்று, பிரிட்டன் அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி முகாம் நடத்தியுள்ளதாக, தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் வடகிழக்குப் பருவ மழையைப் பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மழைநீரை சேகரிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வெள்ளத்தின்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றுவது, உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்வது, தண்ணீரை வெளியேற்றுவது, மக்களை மீட்பது, நோய்களைக் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும்,கடலோர மாவட்டங்களில் இந்த வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மக்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வுத் தேவை என்றும், மக்களும் அரசுடன் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே அரசின் நடவடிக்கைகள் வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார்.