தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் காமராஜ் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
1. சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சென்னை வடக்கு மற்றும் சென்னை தெற்கு என 28 லட்சம் ரூபாயில் பிரிக்கப்படும்.
2. மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒரு கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும்.
3. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சென்னை தெற்கு சரகத்தில் புதிதாக மதுரவாயல் மண்டலம் உருவாக்கி, உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகம் 74 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.
4. உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மூலம் மாவட்ட அளவில் நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி 50 லட்சம் ரூபாயில் அளிக்கப்படும்.
5. 18 இடங்களில் 41500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சொந்த சேமிப்புக் கிடங்குகள் 62.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.