தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொருளாதாரம் பாதிப்பு குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைப்பு - ஸ்டாலின் வரவேற்பு - RBI C. Rangarajan

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதாரம் பாதிப்பு குறித்து ஆராயவும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிட, முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் டாக்டர். சி. ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

By

Published : May 10, 2020, 3:42 PM IST

ஊரடங்கால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 ஊரடங்கின் விளைவாக ஏற்பட்டிருக்கும் - மேலும் ஏற்படவிருக்கும், மாநிலப் பொருளாதாரத்தின் மீதான கடுமையான தாக்கம் குறித்து ஆராய்ந்து - அதிமுக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிட, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர். சி. ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் இந்தக் குழுவில் 24 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தாலும் - பொருளாதார வல்லுநரான தலைவர், தொழிலதிபர்கள் தவிர - எஞ்சிய அனைவருமே அலுவலர்களைக் கொண்ட “உயர்நிலைக் குழுவாகவே” அமைந்திருப்பது சிறப்பானதுதானா எனத் தோன்றுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவை அரசியல் கட்சிகளின் சார்பில்கூட பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

எனவே, இந்த உயர்நிலைக் குழுவில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாநிலத்தின் மூன்று பெரும் தொழில்களான வேளாண்மை - நெசவுத் தொழில் - மீன்பிடித் தொழில் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளையும், சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் உறுப்பினர்களையும் நியமித்திட வேண்டும் என்றும் - மூன்று மாதங்கள்வரை காத்திராமல், ஒரு மாதத்திற்குள் இடைக்கால அறிக்கையினைப் பெற்று, அனைத்து மட்டங்களிலும் உரிய ஆலோசனை நடத்தி - மக்களை மேலும் பாதிக்காத வகையில், பொருளாதார மறுகட்டமைப்பு, சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் ஆகியவற்றை மீட்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கையைத் திரும்பவும் உருவாக்கி நிலைநிறுத்தவும், போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அதற்குப் பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கிடத் தயாராகவே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details