தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ”உள்ளாட்சித் தேர்தல் தேதியை மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிக்க வேண்டும். தற்போது ஊரக உள்ளாட்சியில் 35 விழுக்காடு வாக்காளர்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 65 விழுக்காடு வாக்காளர்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.
முறைகேடுகள் நடைபெறாமலிருக்க மாநகராட்சி, நகராட்சித் தேர்தலில் மக்களே தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்படி, அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஒழுங்கீனம், குதிரை பேரம், தேர்தலை கொச்சைப்படுத்தும் வகையில் பணம் கொடுத்து தலைவர்கள் வரக்கூடிய சூழ்நிலையை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.
மக்கள் விரும்பாத ஒன்றை திணிக்கும்போது அரசுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானது. குறிப்பாக, மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவருகிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டுமே தவிர, அவர்களின் மீது காவலர்களைக் கொண்டு வன்முறையை ஏவுவதோ, தடியடி நடத்துவதோ, கைதுசெய்து சிறையில் அடைப்பதோ ஜனநாயக நாட்டில் கண்டனத்திற்குரியது“ என்றார்.
குதிரை பேரத்தை அனைத்துக் கட்சிகளும் தடுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் இதையும் படிங்க: எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம்