சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ், கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம், மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாட்டுகளில் ஊராட்சி ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகளை நடத்துதல், ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்களைக் கொள்முதல்செய்து வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்காக 76 கோடியே 23 லட்சத்து ஒன்பதாயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும், "இத்திட்டதின்படி, இருபாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்க வேண்டும். இது தவிர, மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனைக்குழு, ஊராட்சி, பேரூராட்சி விளையாட்டு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும். இந்த ஆலோசனைக் குழுக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.