சென்னை:தமிழ்நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 482 பள்ளிகளில் பழுதடைந்த 4 ஆயிரத்து 808 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் 8 ஆயிரத்து 228 பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இடிக்கப்படாத பள்ளிக் கட்டடங்களில் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் அவலநிலை உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 6 ஆயிரத்து 218 செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 27 லட்சத்து 24 ஆயிரத்து 206 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இடிக்கும் பணி: அதேபோல் தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 25 லட்சத்து 50 ஆயிரத்து 997 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை ஆண்டுதோறும் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பருவமழையின் போது பழுதடைந்த கட்டடங்களின் கணக்குகளை சேகரிக்கும் பள்ளிக் கல்வித் துறை, அந்தக் கட்டடங்களை இடிப்பதற்கு பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறையிடம் பட்டியலை அளிக்கும். ஆனால் கட்டடங்கள் மட்டும் இடிக்கப்படாமல் அப்படியே பழுதடைந்து நிற்கும்.