தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'உதவாக்கரைகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் நீட்' - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் நடத்தப்படும் நீட் தேர்விற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

By

Published : Jun 6, 2019, 4:07 PM IST

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த மே 5ஆம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் நடைபெற்றது. இப்போது ஜூன் 5ஆம் தேதி தேர்வு முடிவு வெளியானது. 2017, 2018ஆம் ஆண்டுகளில் நடந்ததுபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.

திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ரிதுஸ்ரீ; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா. நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டும், தீயிட்டும், தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தனைக்கும் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவிகள் இருவரும் தன்னம்பிக்கையால்தான் நீட்டை எதிர்கொண்டனர். ஆனால் சூழ்ச்சி, சதி, வஞ்சகமே உருவான நீட் இவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்த்துவிட்டது என சாடியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வே நடத்தப்படுகிறது. அதனால்தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகம் பேர் வெற்றிபெற முடிகிறது. மாநிலக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் வெற்றிபெற முடியாமல் போகிறது.

நாடு முழுவதிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைதான் மிக மிக அதிகம். அப்படியிருந்தும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில்தான் நீட் நடத்தப்படுகிறது என்றால் அது திட்டமிட்ட சதியன்றி வேறென்ன? எனக் காட்டமாகக் கூறியுள்ளது.

மேலும், மேல்சாதி என்கின்ற ஒரு மைக்ரோ சிறுபான்மையினர், மேல்தட்டு, மேட்டுக்குடி என்கின்ற பணக்காரர் ஆகியோருக்காகத்தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எப்படி? அவை சிந்தனை முறைப்படியானதில்லை. ஆம் - இல்லை, சரி - தவறு என்று பதில் சொல்லும்படியான கேள்விகளே.

இதற்கு கணினியே போதும், மனிதன் தேவையில்லை. இப்படி எதற்கும் உதவாத தேர்வு. உழைக்கும் வர்க்க மாணவர்களை ஒதுக்கிவிட்டு உதவாக்கரைகளுக்காகவே உருவாக்கப்பட்ட தேர்வு இது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details