உலகில் வாழும் மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்! தமிழ் நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கல்தோன்றி மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்குடி. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய இலக்கணங்கள் உண்டு.
ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். நம் தமிழ் மொழிக்கு 16 பண்புகள் உள்ளதாக தேவநேய பாவணார் பட்டியலிட்டுள்ளார். அவை தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகியன ஆகும்.
தமிழ் என்னும் இனிமை
'இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ என்கிறது பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல். ‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பதினெண் கீழ்கணக்கு நூல்கள், பதினெண் மேல்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பக்திப் பாடல்கள் எனத் தமிழின் இலக்கிய, இலக்கண வளத்தை அடுக்கிகொண்டே போகலாம்.
'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்கிறார் திருமூலர்.
'என்றுமுள தென்தமிழ்' என்று புகழ்கிறது கம்பராமாயணம்.
"இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்" என்கிறது தமிழ்விடுதூது.