தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பஞ்சாயத்து செயலாளர்; கடந்து வந்த வலி நிறைந்த பாதை!

ஆணாக பிறந்து பின், திருநங்கையாக மாறிய சந்தன்ராஜ் (எ) தாட்சாயணி என்பவருக்கு முன்பு பணியில் இருந்த ஊரக வளர்ச்சித்துறையிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 14-ன் படி, தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

By

Published : Mar 25, 2022, 10:59 PM IST

சந்தன்ராஜ் (எ) தாட்சாயணி
சந்தன்ராஜ் (எ) தாட்சாயணி

திருவள்ளூர்: பொதுவாகவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போதே, நம் குழந்தை அதன் வருங்காலத்தில் இந்த பணிக்குதான் செல்லவேண்டும்; அதற்குப் பள்ளியில் இதைத் தான் படிக்கவேண்டும் என்று பெற்றோர்கள் எண்ணுவது இயல்பு. இதைத் தவறாகப் பார்ப்பதும் சரியாக பார்ப்பதும் அவரவர் இயல்பைப் பொறுத்து மட்டுமே அமையும்.

தமிழ்நாட்டில் அரசுப்பணி என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு அலாதியான விருப்பம் உண்டு. அந்த விருப்பம் ஆண், பெண் என்ற இரு பாலினத்தவர்களுக்கு மட்டுமில்லை.

இதே சமயம் சமூகத்தின் ஒரு அங்கமாக ஹார்மோன்கள் மாறுதல்களினால் மூன்றாம் பாலினத்தவர்களாக உள்ளவர்களுக்கும் இது போன்ற ஆசைகள் வருவதும், அதை அடைய அவர்கள் கல்வி அறிவைப் பெற்று அதன் அடிப்படையில் தங்களை தயார்ப்படுத்தி கொண்ட பிறகு அவர்களுக்கும் அது சாத்தியமாகும் என்பதை சமீப காலங்களாக நாம் கண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் திருநங்கைகள்:அந்த வகையில் தமிழ்நாடு அரசும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தமிழ்ச் சமூகத்தில் இருந்த சில இழிவானப் பெயர்களுக்கு மாற்றாக 2006ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, மூன்றாம் பாலினத்தவர்களை 'திருநங்கை', 'திருநம்பி' எனப் பெயரிட்டு அதற்காக சட்டமும் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, இந்த வார்த்தையே அவர்களைக் குறிக்க அரசு ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தைகள் அவர்களின் வாழ்வில் சந்தித்தப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாய் அமைந்தது.

திருநங்கைகள் நல வாரியம்:அத்துடன் திருநங்கையர்களின் சமூக பாதுகாப்புக் கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையிலும் 2008ஆம் ஆண்டு ஏப்.15ஆம் தேதி தமிழ்நாடு அரசு, 'தமிழ்நாடு திருநங்கையர்கள் நல வாரியம்' ஒன்றை அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட நாளையே 'திருநங்கையர் தினம்' என்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட தமிழ்நாடு அரசால், 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூவிருந்தவல்லி அருகே சாந்தன்ராஜ் என்பவர் அண்ணம்பெடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக கடந்த 2010ஆம் ஆண்டு பணியாற்றி வந்தபோது, நிர்வாக காரணத்தால் பணி மாறுதலில் கொசவம்பாளையம் ஊராட்சியில் 2015ஆம் ஆண்டு ஊராட்சி செயலாளர் பணிக்கு மாற்றியதன் பின் அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

பணியில் இருக்கையில் அவர் ஹார்மோன் மாறுதல்களினால், ஆண் பாலில் இருந்து திருநங்கையாக மாறும் உணர்வுகள் ஏற்பட்டதால், மன தடுமாற்றத்தால் பணிக்கு சரிவர முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து 2015ஆம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்லாமல் கடந்த 2020ஆம் ஆண்டு ஊராட்சி செயலாளர் பணியிடம் கோரி விண்ணப்பித்து இருந்தார்.

பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் தனது பணிக்கான நியமன ஆனை பெற்றார்

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை:இதற்கிடையே தற்போது முழுமையாக திருநங்கையாக மாறிய தனக்கு 'திருநங்கை' என்ற அடிப்படையில் மனிதாபிமான முறையில் ஊராட்சி செயலாளராக மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று பூவிருந்தவல்லி ஒன்றியம் கொசவம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்த சந்தன்ராஜ் என்கிற தாட்சாயணியை, தற்பொழுது எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியமர்த்தப்பட்டதற்கான ஆணையை (மார்ச் 24) நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் வழங்கியுள்ளார்.

முதல் திருநங்கை பஞ்சாயத்து செயலாளர்:பணி நியமன ஆணையைப் பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருநங்கை தாட்சாயணி, தற்பொழுது திருநங்கையான தனக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஊரக வளர்ச்சித்துறையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, கோடுவெளி ஊராட்சி மன்றத்தலைவர் சித்ரா ரமேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் அவர், திருநங்கைகளுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கி திருநங்கைகளின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் தான் கடந்து வந்த வலி நிறைந்த பாதை குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் தாட்சாயணி பகிர்ந்ததாவது, ’ஊராட்சி செயலர் பதவியில் பணிபுரிந்தபோது, எனது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் மற்றவர்களிடம் பேச கூச்சப்பட்டு வெட்கப்பட்ட நிலையில், என்னை யாரென்று வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி 2015ஆம் ஆண்டில் பணியைத் துறந்து, மணிபாலில் உள்ள KMC மருத்துவமனையில் 2017ஆம் ஆண்டு திருநங்கை அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். தொடர்ந்து மற்றவர்களிடம் பேச வெட்கப்பட்டும்; தலைகுனிந்தும் இருந்த நிலையில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். என்னைப் போன்ற திருநங்கைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன்.

அப்போது நண்பர்களின் உதவியுடன் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வந்தேன். பின்னர் திமுக மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன் உதவியுடன் மீண்டும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடிவெடுத்து, 2020ஆம் ஆண்டு அரசு வேலைக்கு விண்ணப்பித்தேன். அதாவது ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பித்து, தற்போது மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஊராட்சி செயலாளருக்கான பணி ஆணையைப் பெற்றேன்’ என்றார்.

சவால்களை சாதனையாக்கியவர்:சந்தன்ராஜ் என்ற ஆணாகப் பிறந்து பின் திருநங்கையான தாட்சாயணி, ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வாய்ப்பினை திருநங்கையாக மாறிய பின்னும் மீண்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் திருநங்கை என்ற வாய்ப்பு அவருக்கு கிடைந்துள்ளது.

ஆணாகப் பிறந்து பின் திருநங்கையாக மாறிய சந்தன்ராஜ் (எ) தாட்சாயணி, எதிர்கொண்ட உடல் சவால், மன அழுத்தம், குடும்பத்தினரின் புறக்கணிப்பு, சமுதாயத்தின் வெறுப்பு போன்ற அனைத்து துயரங்களையும், சவால்களையும் இதன் மூலம் தவிடு பொடியாக்கி சாதனைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: குல தெய்வ வழிபாடு.. பாரம்பரிய நடனம்.. சித்த ராமையா அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details