சென்னை:தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்.22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வென்றது.
இதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களின் போது பல்வேறு காரணங்களால் சில இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை.
இதனைத்தொடர்ந்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் மார்ச் 26ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மறைமுகத் தேர்தல் நேரம்
பல்வேறு காரணங்களால் தேர்தல்கள் நடைபெறாமல் காலியாக உள்ள நகராட்சித் தலைவர்கள் மற்றும் நகராட்சி துணைத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர்கள் உள்ளிட்ட 62 பதவியிடங்களுக்கு மார்ச் 26ஆம் தேதி அன்று மறைமுகத் தேர்தல் கூட்டம் நடத்திட ஆணையத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் காலை 9.30 மணிக்கும், நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் மதியம் 2.30 மணிக்கும் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாணவரின் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும்: தனியார் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு