சென்னை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறிஇருப்பதாவது;
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மேலாண்மையில் மத்திய அரசு மிகப் பெரும் தோல்வி அடைந்து உள்ளதை உள்நாட்டில் மட்டும் இல்லாமல், சர்வதேச ஊடகங்களும் அம்பலப்படுத்தி வருகின்றன. இந்திய அரசே செயலற்றுப் போனது என்கிற அளவிற்கு விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.
இத்தனைக்கும் பேரிடர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்கள் மற்றும் நிதி ஆகியவை மத்திய அரசிடம் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நிலையில் தமிழ் நாட்டில் புதிதாக பதவி ஏற்றுள்ள தங்கள் தலைமையிலான அரசு, நெருக்கடியான இந்த சுகாதாரப் பேரிடர் பணிகளை ஆக்கப் பூர்வமாக திறம்பட முன்னெடுத்து வருவது பாராட்டிற்குரியது.
மத்திய கல்வி அமைச்சரின், நெறிமுறைகளுக்கு புறம்பான கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்து தனது காத்திரமான பணியை வெளிக்காட்டியுள்ளது. இத்தகைய கல்வி நலன் காக்கும், மாநில உரிமைகள் காக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தனது முழு ஆதரவையும் அளிக்கிறது.
தங்கள் தலைமையிலான அரசு, நமது மாநிலத்தின் மிக நீண்ட கால கோரிக்கையான கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், மாநிலத்திற்கென்று சுயமான கல்விக் கொள்கை உருவாக்குதல், மத்திய அரசு கொள்ளைப் புறமாக அமல்படுத்த நினைக்கின்ற சனாதன, மக்கள் விரோத கல்விக் கொள்கையை நிராகரிப்பது ஆகியவற்றில் மிக உறுதியாக செயல்படும் என்ற நம்பிக்கையினை தொடக்கம் முதலே உருவாக்கியுள்ளீர்கள்.
அதே நேரத்தில், கடந்த அரசு, புதிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை சந்தடியின்றி அமலாக்கம் செய்தது.
அவை:
- தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேற்பார்வையிட்டு வழிநடத்திடும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் வட்டாரக் கல்வி அலுவலர் என்று பெயர் மாற்றம் செய்தது.
- அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், வட்டார மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒழித்துக் கட்டியது.
- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டன.
- புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த மாற்றங்கள் பலவும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பல்வேறு குழப்பங்கள் உருவாக காரணமாக இருந்தனவே தவிர, கல்வி வாய்ப்பு, கற்றல் கற்பித்தல் முறைகள் கற்றல் மேம்பாடு போன்றவற்றில் எந்த விதமான மாற்றங்களையும் உருவாக்கவில்லை. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட சீர்குலைவுகளை சரி செய்யாமல், பள்ளிக் கல்வி இயக்குனர் பதவிக்கு மேல் ஆணையாளர் பணியிடம் உருவாக்கப்படுவது, புதிய கல்விக்கொள்கையின் நீட்சியாகவே தோன்றும்.
இதனைப் பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும் கல்விக்கான இயக்கங்களும் சுட்டிக்காட்டி இருக்கின்றன. அறிவொளி இயக்க காலம் தொட்டு கல்வியில் களப் பணியாற்றி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும் எனவும் திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: லாபம் தரும் ரெயின்போ டிரவுட் மீன் வளர்ப்பு!