சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி வேண்டி கடந்த 17ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் வன்முறையாக மாறி தனியார் பள்ளி வளாகம் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த கலவரத்தை தொடர்ந்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என நேற்று முன்தினம் (ஜூலை 17) அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தங்களின் அனுமதியில்லாமல் பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் (ஜூலை 18) மூடப்பட்ட மற்றும் செயல்பட்ட தனியார் பள்ளிகளின் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டார்.