சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நோயினைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் சுகாதாரத் துறையால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார துணை மையங்கள், நகர்ப்புறம், தாலுகா மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை மூலம் தேவையான அளவிற்கு பொது சுகாதாரம் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதார முகாம்கள் மற்றும் அனைத்து நிவாரண முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இடைவிடாத மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ளப் பிற பகுதிகளில், கூடுதலாக 416 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 770 ஜீப் வாகனங்கள் நோய்த்தடுப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதார அலுவலர்கள் தொடர் பணியில் ஈடுபடவேண்டும்
சென்னை மாநகராட்சி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுகாதார அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தொடர் பணியில் ஈடுபட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து சுகாதாரம் மற்றும் பிற தொடர்புடையவர்கள் நோய்ப் பரவாமல் தடுக்க அனைத்துத் துறைகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கரோனா தொற்றைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீரால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ முகாம் மூலம் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இருமல் போன்ற நோய்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்தப் பகுதியைத் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். நல்ல நீர் தேங்குவதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கொசு ஒழிப்பிலும் தீவிரம் காட்ட வேண்டும்.
பொதுமக்கள் மழைநீர் காலத்தில் வரும் நீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தால் சுயமாக மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அவசர ஊர்திகள் தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர ஊர்தி வாகனங்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் காவல் நிலையங்கள் அருகில் நிறுத்தி வைக்க வேண்டும்.
தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் கூடுதலாக 044 29510400, 044 29510500, 9444340496, 8754448477 என்ற எண்ணிலும், 104 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்," எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி