சென்னை: சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், "தனியார் சிமெண்ட்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் மாத முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டுவந்தது. மேலும், ஆலோசனை மேற்கொண்டு சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்களுடைய சிமெண்ட் சில்லரை விற்பனை விலையினை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைத்து, 15.06.2021 முதல் விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக சிமெண்ட் விலையானது 420 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 3,67,677 மெட்ரிக் டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்படம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68,233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.