சென்னை:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி, வரும் 25,26,27 தேதிகளில் சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி இன்று (செப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில், கடுமையான அடக்குமுறையை 'மோடி அரசு' எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு இந்திய அரசமைப்புச் சட்டம்தான். இதன் மூலமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் காப்பாற்றப்படும்.
இந்தப் பின்னணியில் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தைப்பாதுகாக்கக்கோரி, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை, எஸ்.டி.துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன், சிறுபான்மைத்துறை, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு என எட்டு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்தப் பயணம் செப்டம்பர் 25, 26, 27ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது.