சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் மூன்று நாள் கூட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று(மார்ச்.10) தொடங்கியது.
இந்த கூட்டத்தில் இன்று(மார்ச்.11) பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களது மாவட்டங்களில் நிறைவேற்ற கூடிய திட்டங்கள் குறித்த கள நிலவரத்தை தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மூலப்பொருள் கிடைக்கும். அது மஞ்சளாகவோ, கனிமமாகவோ இருக்கலாம். இவற்றை எப்படி மார்க்கெட் செய்வது. அதன்மூலம் அரசுக்கு எப்படி வருமானம் ஈட்டுவது. இதனால் விவசாயிகள், சிறு-குறு தொழிலாளர்களுக்கு என்ன பயன் என்பது குறித்த ஆலோசனையை தெரிவிக்கலாம். இந்த ஆலோசனை வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர், "அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டாலும், அது சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்குச் சென்றடைய வேண்டும். அதுவே சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும்" என்றார்.
இதையும் படிங்க:சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மேலிடத்திலிருந்து ஆணை வர எதிர்பார்த்து காத்திருக்கவும் கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்