சென்னை: தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒமைக்ரான் குறித்து பதற்றம் தேவையில்லை. ஆனால் அதை தடுக்க இரு தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் , தகுந்த இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம்.
கரோனா பல உருமாற்றங்களை கண்டுள்ளது , வரும் நாள்களிலும் மாறுதல் பெறும் பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்தியா முழுவதும் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் கேட்டு வருகின்றனர். மத்திய அரசு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இது குறித்து முடிவு செய்வர்.
நீலகிரியில் பழங்குடியினர் முழுவதுமாக தடுப்பூசி போட்டுள்ளனர், ஆனால் நகர்ப்புறங்களில் பலர் இப்போதும் தயங்குகின்றனர். ராணிபேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் தர்மபுரி, வேலூர், மதுரையிலும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
கரோனாவில் டெல்டா வகைதான் உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இதுவரை 20 விமானங்கள் வந்துள்ளன. பாதிப்பற்ற நாடுகளிலிருந்து 85 விமானங்கள் வந்துள்ளன. மொத்தமாக 12,188 பேருக்கு சோதனை செய்துள்ளதில், 3பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் மூவரும் நலமாக உள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஒமைக்ரான் இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது , இது முதல் கட்ட ஆறுதலை தந்துள்ளது.