தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எங்கே இந்தி திணிக்கப்படுகிறது? மத்திய அரசின் ஏதாவது உத்தரவு இருந்தால் காட்டுங்கள்? - அண்ணாமலை கேள்வி

இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தும் ஒரு நாடகத்தை மீண்டும் தொடங்கி இருக்கின்றீர்கள். எங்கே இந்தி திணிக்கப்படுகிறது? இந்தியை யார் திணிக்கிறார்கள்? மத்திய அரசின் ஏதாவது உத்தரவு இருந்தால் காட்டுங்கள். யாரை எதிர்த்து இந்த போராட்டம் ? என்று தமிழ்நாடு அரசிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

tamil nadu bjp president annamalai on resolution against Hindi imposition
tamil nadu bjp president annamalai on resolution against Hindi imposition

By

Published : Oct 19, 2022, 7:36 AM IST

சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டமன்றத்தில் இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள். சரி, இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தும் ஒரு நாடகத்தை மீண்டும் தொடங்கி இருக்கின்றீர்கள். எங்கே இந்தி திணிக்கப்படுகிறது? இந்தியை யார் திணிக்கிறார்கள்? மத்திய அரசின் ஏதாவது உத்தரவு இருந்தால் காட்டுங்கள். யாரை எதிர்த்து இந்த போராட்டம் ? எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது ஏதாவது ஒரு பழி சொல்லி போராட்டம் நடத்துவீர்களே!. இதுவும் அதுபோல ஒரு நாடகமா? இந்தத் தீர்மானத்தினால் ஆகப்போவது என்ன? தீர்மானம் மட்டும் போடத்தான் இந்த ஆட்சியா? மொழி அடிப்படையை கொண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டது, இப்போதல்ல. 1986ஆம் ஆண்டில் இரண்டாம் தேசிய கல்விக் கொள்கையை, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து உருவாக்கிய திமுக அரசு, ஏன் இந்தியை கட்டாயம் பாடமாக வைத்திருந்தது.

திமுகவின் கூட்டணியில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தானே, இந்தி அடிப்படையில் மாநிலங்களை மொழிவாரியாக மூன்று பிரிவாக பிரித்தது. அப்போது அதை ஏன் திமுக அரசு தடுக்கவில்லை?. மொழிவாரியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களில், முதல் பிரிவு இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் மாநிலங்கள். அப்படி இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், இந்தியில் படிக்காமல் வேறு எந்த மொழியில் படிப்பார்கள்? உங்களின் இருமொழிக் கொள்கை என்பது என்ன? ஆங்கிலம் கட்டாயம் ஆனால் தமிழ் கட்டாயமில்லை என்பது தானே? அதனால் தான் தமிழ்நாட்டில், இருமொழிக் கொள்கை என்ற பெயரில் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல் படிக்கக் கூடிய வாய்ப்பை தமிழ்நாட்டில், உருவாக்கி இருக்கிறீர்கள். இது தமிழ் மொழிக்கு செய்யும் துரோகமில்லையா? தமிழ்நாடு அரசு செலவில், ”தமிழ் மொழியை படிக்காமலேயே”, கல்லூரிவரை படிக்க வசதியாக, அரசு செலவில் இயங்கும் அரசுப்பள்ளிகள் பட்டியல் உண்மையா இல்லையா?

பயிற்று மொழியாக

  • உருது மொழியில் பள்ளிகள் 56.
  • மலையாளப் பள்ளிகள் 50,
  • தெலுங்குப் பள்ளிகள் 35,
  • கன்னட பள்ளி -1,

இது தவிரப்பாட மொழியாக,

  • உருது மொழியில் 204 பள்ளிகள்,
  • மலையாள மொழியில் 50 பள்ளிகள்,
  • தெலுங்கு மொழியில் 234 பள்ளிகள்,
  • கன்னட மொழியில் 60 பள்ளிகள், அரசு செலவில் இயங்குகின்றன.

தமிழ் மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசுக்கு இந்தியை மட்டும், விருப்பமுள்ளவர்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்? கல்வியில் ஏன் அரசியல் செய்கின்றீர்கள்? இத்தனை பள்ளியிலும் நீங்கள் தமிழைத் தவிர்த்து பிற மொழிகளைச் சொல்லித்தருவது உண்மைதானே? உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை 690 அரசுப் பள்ளிகளில் சொல்லித் தரும்போது இந்தி மொழியை படிக்கும் நல்ல வாய்ப்பை தமிழக மாணவர்களுக்கு மறுப்பதற்கான காரணம் என்ன? ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது, தமிழ் மொழியை பள்ளிக்கல்வியில் கட்டாயப் பாடமாக ஆக்கிவிட்டீர்களா? பள்ளிக்கல்வியில் தமிழ்மொழியை பயிற்று மொழியாக அறிவித்து இருக்கிறீர்களா? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கும், உங்கள் ஆட்சிக்காலத்தில், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் கூட ஆங்கிலத்தில் மிகப் பெரிதாகவும் தமிழில் கண்ணுக்குத் தெரியாத சிறிய அளவிலும் அல்லது தமிழில் பெயர் பலகையை இல்லாமலும், இருப்பது உங்களுக்கு தெரியுமா?

மத்தியில் பலமுறை ஆட்சிக்கட்டிலில், காங்கிரசுடன் கை கோர்த்திருந்த காலத்தில், எட்டாவது அட்டவனையில் உள்ள அனைத்து 22 மொழிகளுக்கும், சம அளவில் நிதி ஒதுக்கினீர்களா? உங்கள் கட்சியின் பெயரிலேயே தமிழ் இல்லையே? தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும், தாங்களா தமிழர்களை முன்னேற்றப் போகிறீர்கள்? ஆனால் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார். ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழின் மேன்மையை பேசியிருக்கிறார் காசி பல்கலைக்கழகத்தில், பாரதியின் பெருமைகளைப் பேச தமிழுக்கான ஒரு இருக்கையை அமைத்திருக்கிறார்.

தமிழுக்கு செம்மொழி ஆய்வு மையம் அமைத்து, ஆண்டிற்கு பல கோடி ரூபாய் ஒதுக்கி, தகுதிசால் அறிஞர்களைக் கொண்டு, தமிழ் ஆய்வு நடவடிக்கைகளை மத்திய அரசு தானே செய்து வருகிறது.ஆனால், தமிழுக்கு என்று எதுவுமே செய்யாமல் தமிழுக்காக போராட்டம் என்ற பொய்யுரையை இன்னும் எத்தனை நாள் சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்? இந்தி எதிர்ப்புப் போர், உங்களை 1967ல் அரியணை ஏற்றியது இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் உங்கள் வீழ்ச்சிக்கும் காரணமாகப் போகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சைக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை - சசிகலா

ABOUT THE AUTHOR

...view details