சென்னை : ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு படைப்பாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரம் மீது ஒன்றிய அரசு கல்லெறிவதாக படைப்பாளிகள் சாடியுள்ளனர்.
இந்தியாவில் எடுக்கப்படும் அனைத்து திரைப்படங்களும் மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் சான்றிதழ் பெற்ற பிறகே திரையரங்குகளில் வெளியாகும். திரைப்படங்களில் வரும் பாலியல், வன்முறை காட்சிகள் பொறுத்து மூன்று விதமான சான்றுகள் அளிக்கப்படுகின்றன.
தணிக்கை சான்றிதழ்
அந்தச் சான்றுகள் யு, யு/ஏ, ஏ ஆகும். இங்கு படங்களுக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுக்கும் பட்சத்தில் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் அங்கு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
அவர்களும் மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது மட்டுமே வழி. இதுதான் தற்போது திரைப்படங்களுக்கு சென்சார் வழங்கப்பட்டுவரும் வழிமுறைகள். ஒன்றிய அரசு இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை சமீபத்தில் கலைத்துவிட்டது.
ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்
இந்த நிலையில்தான் ஒன்றிய அரசு தற்போது இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவை கொண்டுவந்துள்ளது. அதன்படி தணிக்கை குழு சான்று அளித்த ஒரு திரைப்படத்தை சான்றிதழ் மாற்றி வழங்கவோ அப்படத்தை தடை செய்யவோ ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உண்டு என்ற புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளார்கள்.
இதற்கு திரைப்பட படைப்பாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்று பலரும் எதிர்த்து வருகிறார்கள். திருட்டுத்தனமாகவும், கள்ளத்தனமாகவும் திரைப்படங்களை வெளியிடுவதால், திரையுலகிற்கும் அரசாங்கத்திற்கும் பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்றும், இதனைத் தடுக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தம் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.
படைப்பாளிகள் அச்சம்
ஆனால், மத்தியில் இருக்கும் எந்த அரசும் தாங்கள் மக்கள் மீது திணிக்க விரும்புவதை மட்டுமே திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கக் கூடும் என்றும் படைப்பாளிகள் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எஸ். ஆர். பிரபு எதிர்ப்பு
நேர்மையற்ற இந்தத் திருத்தங்களுக்கு எதிராக தேச அளவில் திரைத்துறையினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
கமல், சூர்யா, பா.ரஞ்சித் எதிர்ப்பு
நடிகர் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், அனுராக் காஷ்யாப், பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் கார்த்தி எதிர்ப்பு
இந்திய இறையாண்மைக்கு எதிராக எடுக்கப்படும் படங்களை தடுக்கவே இந்தச் சட்டம் என்று ஒருசிலர் கூறிவந்தாலும் இது முழுக்க முழுக்க சர்வாதிகாரப்போக்கு என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறைக்கு இந்தச் சட்ட வரைவு இன்னும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று திரையுலகினர் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : வெள்ளி விழா காணும் பிவி சிந்து!