நாடாளுமன்றத் தேர்தலால் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் டி.ராஜேந்தரும் தனது அரசியல் பணிகளை விறுவிறுப்பாக்கியுள்ளார்.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு அணி உருவாக்குவேன்: பகீர் கிளப்பும் டி.ஆர். - டி ராஜேந்தர்
சென்னை: அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணி உருவாக்குவேன் என இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இலட்சிய திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டி.ராஜேந்தரிடம் விருப்ப மனுக்களை அளித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் முன்பு சத்திரியன்; இப்போது விவேகமான சாணக்கியன்; யோசித்துதான் முடிவு எடுப்பேன். இன்றைய அரசியலில் அறிவாளி, உழைப்பாளி, போராளி என நினைத்தால் ஏமாளியாகி விடுவார்கள்.
ஒரு பெரிய கட்சி (அதிமுக) அவர்களது சின்னத்தில் நிற்க கூறியதால் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்குவேன். இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது இயக்கம், கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம்” என்றார்.