சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததில், பின்னால் வந்த லாரி ஏறியதால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையின் மையப்பகுதியில் அதிமுக நிர்வாகியால் வைக்கப்பட்டிருந்த பேனரே சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிந்தபின் பல்வேறு கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டிவந்த பிகாரைச் சேர்ந்த மனோஜ் யாதவ் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல் ஐபிசி பிரிவு 279, அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் ஐபிசி பிரிவு 304(அ) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் ஐபிசி 336 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது முன்பிணையில் வெளிவரமுடியாத ஐபிசி 308 கொலையாகாத மரணத்தை ஏற்படுத்துதல் என்கிற பிரிவின் கீழ் பரங்கிமலைப் போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேகநாதன் பதாகை வைக்க பயன்படும் இரும்புச் சட்டம் வாடகைக்கு விடும் தொழில் செய்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.