சென்னை:மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) தேர்வுக்கான மையம் ஒன்றுகூட தமிழ்நாட்டில் இல்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர், சிஆர்பிஎஃப் இயக்குனநருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய ரிசர்வ் காவல் படையின் துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்காக தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்துள்ளவர்களின் பிரச்னையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மத்திய ரிசர்வ் காவல் படை 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனத் தேர்வு முறைமைக்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அது குரூப் "பி", குரூப் "சி" அமைச்சுப் பணி அல்லாத (Non ministerial) விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக 31.08.2020 அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த காலியிடங்கள் 780 ஐ விட அதிகம். எழுத்து தேர்வு 20.12.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன.
வட மாநிலங்களில் 5 மையங்கள் அமைந்திருப்பதில் தவறில்லை. ஆனால் சமத்துவ அணுகுமுறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லை என்பதே பிரச்னை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.
இத்தகைய சமத்துவமற்ற பங்களிப்பு, தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். அதிலும் குறிப்பாக இன்றைய கோவிட் 19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்னைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாக மாறக் கூடாது.
ஆகவே, தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டுகிறேன்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.