கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், கரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும்.
ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு பட்டியலில் வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விஜயதசமியன்று மட்டும் கோயிலைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.
அப்போது ஆஜராயிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
வழக்கு மீண்டும் இன்று (அக்.12) மதியம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, நாளை (அக்.13) தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்தார். அதில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசின், சுற்றறிக்கையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் கரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும், நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கட்டும். நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ISIS ஆதரவு பெண்கள் கேரளாவில் கைது