தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெட்டுக்கிளி பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு தேடும் ஸ்டார்ட் அப் நிறுவனம் - வெட்டுக்கிளி பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு

சென்னை: அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெட்டுக்கிளி படையிடமிருந்து உணவு தானியங்களை காப்பாற்றி, அதே நேரத்தில் இந்த பிரச்னையை வாய்ப்பாக மாற்ற திருச்சியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

locust problem revenue model for farmers
ஃப்ரோபெல்லர் டெக்னாலஜி முகமது ஆஷிக் ரகுமான்

By

Published : May 31, 2020, 2:45 PM IST

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், நம்மை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்னையாக உருவெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் படை, வட இந்தியாவில் பயிர்களை நாசம் செய்து கோடிக்கணக்கான மக்களின் உணவை கேள்விக்குறியாக்கி வருகிறது. பலரும் இதனை பிரச்னையாக பார்க்கும் சூழலில், இதனை வாய்ப்பாக பார்க்கிறது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம்.

வேதிப்பொருள்களால் தீங்கு...

வெட்டுக்கிளிகளை அழிக்க, ட்ரோன் மூலம் ரசாயன மருந்து தெளிப்பது, ஹெலிகாப்டர்கள் மூலம் மருந்து தெளிப்பது, தீயணைப்பு வாகனங்கள் மூலம் மருந்து தெளிப்பது போன்ற முயற்களில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நச்சுத்தன்மை கொண்ட ரசாயன மருந்து தெளிப்பதால் மனிதர்களுக்கும் மிகப்பெரிய அளவில் தீங்கு ஏற்படும் என சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நம்பிக்கையளிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம்...

இந்த நேரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, தொழில்நுட்பம் மூலம் இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது. "வெட்டுக்கிளிகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதனை வளமாக பார்க்க வேண்டும்" என்கிறார் ஃப்ரோபெல்லர் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் முகமது ஆஷிக் ரகுமான்.

வெட்டுக்கிளிகளை கொல்வதால் நீண்ட கால பாதிப்பு!

வெட்டுக்கிளிகள் படையை சமாளிக்க பூச்சியியல் துறை நிபுணர்கள், ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், மாற்று முயற்சிகளில் ஈடுபட்டு வரும் எம்-ஆட்டோ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஃப்ரோபெல்லர் டெக்னாலஜியும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

என்ன கூறுகிறார் ஆஷிக்

இது தொடர்பாக பேசிய ஆஷிக், "பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை கொல்வதற்கான தீர்வு குறித்தும், அதனை விரட்டுவதற்கான தீர்வு குறித்துமே பலரும் முயற்சி செய்து வருகின்றனர். பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் ஆபத்தானவை என்றாலும், வெட்டுக்களிகளில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதனை நாம் வளமாக பார்க்க வேண்டும், வாய்ப்பாக பார்க்க வேண்டும். பொறியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

திட்டம் வகுக்கும் நிறுவனம்...

இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய திட்டத்தை இந்தக் குழு வகுத்துள்ளது. அதன்படி, அதிநவீன தெர்மல் கேரமா உள்ள ட்ரோன்களில் காற்றின் திசைக்கு ஏற்ப பூச்சி எந்த திசையில் வருகின்றன, எந்த இடத்தில் வெட்டுக்கிளிகள் அடர்த்தியாக உள்ளன என்பதை 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரத்திலேயே கணிக்க முடியும் .

அவற்றின் வருகையை கணித்து, அதற்கு ஏற்ப பூச்சிகளை கவர்ந்திழுக்க மூன்று விதமான ஈர்ப்பு முறைகளை பயன்படுத்துகின்றனர். ஒன்று பெரோமோன் மூலமாக ஈர்ப்பது. ஒரு பூச்சி மற்றொரு பூச்சியை தொடர்புகொள்ள பயன்படுத்தும்போது பெரோமோன் ரசாயனத்தை பயன்படுத்துகின்றன. இதை வைத்து பூச்சிகளை பிடிப்பது வழக்கம். இரண்டாவதாக, புறஊதாக் கதிர்களுக்கு வெட்டுக்கிளிகள் ஈர்க்கப்படும் என்பதால் அவை பயன்படுத்தப்படுகின்றன.

வெட்டுக்கிளி பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு தேடும் ஸ்டார்ட்அப்

வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாக தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

மூன்றாவதாக பூச்சிகள் தங்களுக்குள் தகவமைத்துக்கொள்ளும் ஒலியை வைத்து resonance frequency முறையில் பூச்சிகளை பிடிக்க ஈர்ப்பு வலைகள் விரிக்கப்படும். மூன்று விதமான வலைகளில் ஈர்க்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் வெட்டுக்கிளிகள் வந்து அமர்ந்ததும், அவற்றைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அதிக ஒலியுடன் பறக்க வைக்கப்படும். இதனால், அவை அந்த இடத்தை விட்டு தப்பிக்க முடியாது. பின் வெட்டுக்கிளிகள் ராட்சச வலைகள் மூலமாகவோ, அல்லது புறஊதாக் கதிர் ஒளி மூலமாகவோ பிடிக்கப்பட்டு கன்டெய்னரில் அடைக்கப்பட்டு, உயிருடன் தீவனமாக மாற்றப்படும்.

முயற்சிகள் வெல்லட்டும்...

"இந்த முறை வெற்றியடையும் என நம்புகிறோம். வெட்டுக்கிளிகளைப் பிடிக்க சிறிய துளைகளுடைய வலையை தயாரிக்க மீனவர்களுடனும் பேசி வருகிறோம். இந்தத் திட்டம் இறுதி வடிவம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதன் தாக்கம் வருவதற்கு முன்பாக இந்த கருவிகளை உருவாக்கிவிடுவோம்.
வெட்டுக்கிளிகள் உயிருடன் இருக்கும் வரையில்தான் அவற்றின் உடலில் புரதச் சத்துக்கள் இருக்கும். அவற்றை கோழிகளுக்கு தீவனமாகவோ, மண்ணுக்கு உரமாகவோ மாற்றலாம். வெட்டுக்கிளி ஊட்டச் சத்து நிறைந்தது. தற்போது ராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி பிரபலமாகி வருகிறது" என்று கூறினார் அவர்.

25 பொறியியல் அறிஞர்கள் இந்தத் திட்டத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகின்றனர். அறிவியல் மூலம் சமகால பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஃப்ரோபெல்லர் டெக்னாலஜி குழு, வெட்டுக்கிளிகளிகளை கொல்வதைவிட, இதனை தீவனமாக மாற்றி, விவசாயிகளுக்கு வருவாயாக மாற்ற முயற்சிப்பதாக கூறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details