தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்தியக் குழுவிடம் பாதிப்புகளை எடுத்துச் சொல்வதோடு உரிய நிதியினையும் பெறுக! - ஸ்டாலின் வலியுறுத்தல் - Storm

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை; உதவிகளும் போய்ச் சேரவில்லை. மத்திய அரசின் உதவிக்காகக் காத்திராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியக் குழுவிடம் பாதிப்புகளை எடுத்துச் சொல்வதோடு உரிய நிதியினையும் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK Stalin Visits Thiruvarur to inspect cyclone affected area
MK Stalin Visits Thiruvarur to inspect cyclone affected area

By

Published : Dec 6, 2020, 5:27 PM IST

Updated : Dec 6, 2020, 6:24 PM IST

சென்னை புறநகர்ப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றவும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டேன். இன்று (டிச. 06) திருவாரூர், நாகை மாவட்டங்களில் புரெவி புயல் - வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதுடன், பாதிப்புக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதல் கூறி, அவர்களுடன் பேசினேன்.

பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளதால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நீர் சூழ்ந்தும் - மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் உள்ள வேளாண் பயிர்கள் மூழ்கியும்; விவசாயிகளும், மக்களும் துயரத்திலும், சோகத்திலும் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தாளடிப் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போகும் நிலையிலும், இளம் பயிர்கள் முற்றிலும் நாசமாகிவிடும் சூழலிலும் இருப்பதால், விவசாயிகள் வேதனைத் தீயில் சிக்கித் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மிக மோசமான பாதிப்புகளைப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

சாலைகள் பல தண்ணீரில் மூழ்கி அடையாளத்தை இழந்திருக்கின்றன. போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் தாராசுரம் - ஐராவதீஸ்வரர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பல இடங்களில் கரைகள் உடைந்து விவசாய நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அதிகபட்ச பாதிப்பில் அவதிப்படும் மக்கள் தங்களின் எதிர்காலம் என்ன என்றும்- விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகப்போகிறது என்றும் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் ஏதும் போய்ச் சேரவில்லை என்ற குமுறலை நான் சந்தித்த விவசாயிகள் - மக்களிடமிருந்து நேரில் கேட்க முடிந்தது. தூர்வாரும் பணிகளில் நடைபெற்ற ஊழலும், வெள்ளக்காடாகி நிற்கும் இந்த நிலைமைக்கு வித்திட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சி என்ற அளவில் மக்களுக்கு ஆறுதல் சொல்லி- நிவாரண உதவிகளை வழங்கினாலும்- அரசு இயந்திரம் புயல் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழு வீச்சில் இறங்கி மீட்புப் பணிகளில் இதுவரை ஈடுபடவில்லை. அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் - அவர்கள் எல்லாம் மக்களின் துயரத்தைப் போக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில் மத்தியக் குழு வெள்ளச் சேதங்களைப் பார்வையிட வந்திருக்கிறது. இது வரை வந்த பல குழுக்கள் - பார்வையிட்டார்கள்; நிதி வழங்கப் பரிந்துரைத்தார்கள். ஆனால் தமிழகத்திற்குப் பேரிடர் நிதிகள் வந்ததா என்றால்- இல்லை என்றுதான் ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது. பரிதாபமான அந்த நிலை இந்த முறை திரும்பவும் தமிழ்நாட்டிற்கு நிகழக்கூடாது. அதனால் மத்தியக் குழுவிடம் உரிய முறையில் சேதங்களை விளக்கி- நிதி பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதிப்பிலிருந்து மக்களைப் பாதி அளவுக்காவது மீட்க முடியும்.

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை என இப்புயல் பாதிப்பு ஒருபுறமிருக்க, சென்னை - புறநகர் பகுதிகள் இன்னும் கன மழை பாதிப்பிலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை. கழிவு நீர் நிற்பதால் சுகாதாரக் கேடுகளை இந்த கொரோனா காலத்தில் ஏற்படுத்தி வருகிறது. சென்னையுடன் இணைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கடந்த பத்தாண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை - புறநகரில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கும்- பேரின்னல்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். ஒதுக்கப்பட்ட நிதிகளைச் செலவு செய்திருக்கிறார்கள்; ஆனால் திட்டம் நிறைவேறவில்லை என்று வரும் செய்திகள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

எனவே, மத்திய அரசு நிதிக்காகக் காத்திராமல் - கடலூர், திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனடியாக நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக மாநில அரசின் சார்பில் முதற்கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சேத மதிப்பீடுகளை உரிய முறையில் மத்தியக்குழுவிடம் எடுத்துச் சொல்வதோடு நின்று விடாமல் - மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்குத் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக இருப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை- புறநகரில் போர்க்கால வேகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Last Updated : Dec 6, 2020, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details