இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "டெல்லிக்குச் சென்று, என்ன செய்யப்போகிறார்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்டார்கள். இதுவும் செய்வோம், இன்னமும் செய்வோம், இனம்-மொழி நலன் காக்க, எதுவும் செய்வோம், அதற்காக எமது உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈவோம் என்பதை, தங்களின் ஒவ்வொரு நாள் உயிரோட்டமான நடவடிக்கையிலும் மாற்றார் முகாமும் மலைத்திடும் வகையில், சாதித்துக் காட்டி வருகிறார்கள் நமது மக்களவை உறுப்பினர்கள்.
அதுபோல, மாநிலங்களவைத் தேர்தலிலும் நம்முடைய எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறோம். தமிழ்நாட்டின் சார்பில் காலியான 6 மாநிலங்களவை இடங்களில் மூன்று இடங்கள் தி.மு.கழகத்திற்குக் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்றில், மக்களவைத் தேர்தல் நேரத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தலைவர் கலைஞர் அவர்களால் ஏற்கனவே மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டவருமான அண்ணன் வைகோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
திராவிட இனத்தின் செழுமை மிகுந்த குரலாக-தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், பறிபோகும் வாய்ப்புகளைப் பாய்ந்து தடுத்திடவும், அவரது சங்கொலி டெல்லிப் பட்டினத்தில் எதிரொலிக்க இருக்கிறது.
மக்கள் நம்மீது வைத்த மாபெரும் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், கழகத்தின் மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்களின் சீர்மிகு செயல்பாடு ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. பதவியேற்பின்போதே நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க... பெரியார் வாழ்க... திராவிடம் வாழ்க... அம்பேத்கர் வாழ்க... தலைவர் கலைஞர் வாழ்க... என முழங்கியவர்கள் நம்மவர்கள். வாழ்த்து முழக்கங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமைப் போர் முழக்கமாக ஒவ்வொரு விவாதத்திலும் உயரிய கருத்துகளை எடுத்துரைக்கிறார்கள்.
நீட் தேர்வு என்னும் கத்தி மாணவர்களின் மருத்துவக் கனவை அறுத்துச் சிதைப்பதைத் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நின்று நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையே இத்தனை ஆண்டு காலம் மறைத்து வைத்த துரோகத்தை மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்கள் எடுத்துரைத்து, “ஒரு மாநில அரசின் தீர்மானத்தை நிராகரிப்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது” என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி வாதாடினார். மாநிலத்தில் கழகம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருப்பவர்களோ மத்திய அரசின் பல்லக்கைச் சதா காலமும் தங்கள் தலையிலும் தோளிலும் சுமக்கிறார்கள்.
ஆனாலும், மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுக்கும் மகத்தான இயக்கமாக நமது திமுக இருக்கிறது. ரயில்வே துறையை தனியார்மயமாக்கிடவும் இந்தி மயமாக்கிடவும் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளைக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், தென்னக ரயில்வேயில் தமிழ்நாட்டின் திட்டங்கள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை என மக்களவையில் கனிமொழி எடுத்து வைத்த வாதங்கள், எளிய மக்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் இருந்தன.