இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நலனுக்காகத் திட்டங்கள் தீட்டுவதாக கூறிவிட்டு, தமிழ்நாடு விவசாயிகளின் வயிற்றில் கொடூரமாக அடிக்கும் திட்டங்களுக்கு, அனுமதி கொடுப்பது கடும் கண்டத்திற்குரியது.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், இப்போது இந்த அனுமதிகளை வழங்குவது ஏன்? 'மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்' என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பெட்டிப் பாம்பாய் அடங்கி அரவமற்றுக் கிடப்பது ஏன்?
அடக்குமுறை சட்டங்களை ஏவி விவசாயிகளின் போராட்டங்களை அடக்குவதில் மட்டும் கவனம் செலுத்தும் முதலமைச்சர் பழனிச்சாமி விவசாயிகளின் நலனை முற்றிலும் புறக்கணிப்பது கடும் கண்டத்திற்குரியது. காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த முதல் உத்தரவையே அவமதித்துள்ள கர்நாடக அரசை தட்டிக் கேட்க முடியாமலும், மத்திய பா.ஜ.க. அரசிடம் வலியுறுத்தத் துணிச்சல் இல்லாமலும் அதிமுக அரசு தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
காவிரி ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமித்து, இதுவரை ஆணையம் போட்டுள்ள இரு உத்தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சகாரா பாலைவனமாக்கும் விதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதியளிக்கும் முடிவினை மத்திய அரசு உடனடியாகக் கைவிட்டு, விவசாயிகளையும், வேளாண்மையையும் வளர்த்தெடுக்க வேண்டும் என ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.