சென்னை:தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளினால் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தினை மேம்படுத்திட மு.க. ஸ்டாலின் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "பெருமழைக் கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைச் சார்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சென்னையில் லேசான மழைதான் என அறிவிப்பு - ஆனால்...?
உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன்மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளதைக் காண்கிறோம்.
உதாரணமாக டிசம்பர் 30 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம், டெல்டா மாவட்டங்களில் பெய்யும் எனத் தெரிவித்து, அதே சமயம் இடியுடன் கூடிய லேசான, மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் எனக் குறிப்பிட்டிருந்தது.