சென்னை:கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 7) மீன் விற்பனை செய்யும் பெண்மணி, பேருந்து நிலையத்தில் தனது மீன் கூடையுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, அந்தப் பேருந்தின் நடத்துநர், மீன் கூடையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் அவரைப் பயணிக்க அனுமதிக்க முடியாது என அப்பெண்மணியிடம் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
நடந்துநர் திட்டியதால் மனமுடைந்த அப்பெண்மணி பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலரிடம் சென்று கண்ணீருடன் புகார் தெரிவித்தார். குறிப்பாக, பேருந்து நிலையத்தில் தனது ஆதங்கத்தைக் கண்ணீருடன் கூச்சலிட்டு வெளிப்படுத்தினார்.
மூன்று பேர் இடைநீக்கம்
அந்தப் பெண்மணி பேருந்து நிலையத்தில் அழுதபடி பேசுவதை அங்கிருந்தவர்கள் காணொலியாகப் பதிவுசெய்துள்ளனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
அந்தக் காணொலியால் பெரும் கண்டனங்கள் எழுந்ததால் பேருந்து ஓட்டுநர் மைக்கெல், பேருந்து நடத்துநர் மணிகண்டன், நேரக் கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் ஆகியோரை இடைநீக்கம் செய்து அரசு அறிவித்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மீன் விற்பனை செய்யும் பெண்மணியின் காணொலியைக் குறிப்பிட்டு, ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எல்லோரும் சமம் - ஸ்டாலின்
அதில், "குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துனக் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
மகளிர் மேம்பாட்டுக்கான கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில் ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Flood affected areas: நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு