தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறப்பு ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு போராட்டம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

teachers

By

Published : Mar 15, 2019, 1:49 PM IST

ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய நான்கு பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வின் கடந்த 23.9.2017 அன்று நடத்தியது. இந்தத் தேர்வினை சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டபோது அதனை எதிர்த்து தேர்வு எழுதியவர்கள் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதனால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டும் பணி நியமனம் வழங்க முடியாத நிலைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தள்ளப்பட்டது.

இந்நிலையில் சிறப்பாசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு நான்கு மாதத்திற்குள் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு பணி வழங்காததால் சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது அவர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் ஞானகவுரி நேரில் சந்தித்து பேசினார். அவர்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் எனக் கூறினார். அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து தங்களுக்கு உரிய தேதி அறிவிக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேர்வர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறப்பு ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ”ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டி தேர்வினை எழுதி 538 நாட்கள் கடந்தும் தங்களுக்கு இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் சிறப்பாசிரியர்கள் 1080 பேருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கான காலக்கெடு முடிந்த நிலையிலும் எங்களுக்கு பணிநியமனம் வழங்கவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 532 உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட சிறப்பாசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு அரசு பணி நியமனம் வழங்குவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details