தண்ணீர் உலகில் இன்றியமையாதது. உயிர்களுக்கு எது அத்தியாவசியமோ இல்லையோ தண்ணீர் அவசியமானது. ஆனால் தற்போது உலகமே தண்ணீர் பஞ்சத்தில் தலை தொங்கி நிற்கிறது. தமிழ்நாடு நிலைமை படுமோசம். பருவ மழை பொய்த்துப் போக, நிலத்தடி நீர் தொலைந்து போக மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் செல்கின்றனர். குடிக்க நீர் எடுக்க போவதற்குள் உடலில் இருக்கும் நீர் வற்றி போகிறது. தண்ணீர் குறித்து பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, எரியும் குடிசையில் குளிர் காய்வது போல் இதனை பயன்படுத்திக்கொண்டு, தண்ணீர் கேன் போடுபவர்களோ விலையை சர்வசாதாரணமாக ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். தாகம் தீர்வதற்குக் கூட இன்று பணம் அவசியமாகிறது. கொடுமையின் உச்சமாக ராஜஸ்தான் மாநிலம் பரஸ்ரம்புரா என்ற கிராமம் திகழ்கிறது.
ஆம், கடும் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அங்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் பத்து நாட்களுக்கு ஒருமுறைதான். மற்ற நாட்களில் தண்ணீரை சிலர் திருடிச் செல்வதால் நீர் இருக்கும் கேன்களுக்கு பூட்டு போடும் அவலநிலை நிலவுகிறது. தங்கத்தைத் திருடிய காலம் போய் தண்ணீரை திருடும் காலம் வந்துவிட்டது எனவே உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்திய அளவில் மட்டுமில்லை... உலகளவில் தண்ணீர்ப் பிரச்னை எரிந்து கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் முற்றிலும் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய்விட்டது.
தண்ணீர்ப் பிரச்னைக்கு ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நம்மிடமும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஏரிகள் எல்லாம் இப்போது அபார்ட்மெண்ட்டாக வளர்ந்து நிற்கின்றன. மழை வந்தால் நீர் எங்கும் செல்லவில்லை என சலித்துக்கொள்கிறோமே தவிர அதற்கான காரணம் என்ன என்பதைத் துளியும் ஆராயவில்லை. ஒவ்வொரு பெரு மழையின் போதும் வரும் வெள்ளத்தில் விழித்துக் கொண்டு ஏரியை தூர்வாரிக் கட்டடம் கட்டுகிறார்கள் என்று பேசுகிறோம் ஆனால் வெள்ளம் வடிந்த பிறகு நமது விழிப்பும் முடிந்து போகிறது.
தமிழ்நாட்டில் ஏராளமான அணைகள் இருக்கின்றன. அவைகளின் நிலையெல்லாம் தற்போது கண்ணீரை வரவைக்கிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரை தெரியும் அளவு நிர்வாணமாக காட்சியளித்தது. அதே போல் பருவ மழை பொய்த்ததால் மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. குறிப்பாக பாபநாசம் அணையில் தண்ணீர் வற்றியதால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதந்ததைக் கண்டபோது பதறியது.
விவசாயத்திற்குத்தான் நீர் போதவில்லை என்றால், தற்போது குடிப்பதற்கும் நீரின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது அனைவரையும் கலங்கடிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நிலையோ மேலும் பரிதாபம். தண்ணீர்ப் பிரச்னை காரணமாக பல்லாவரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் குலுக்கல் முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி தண்ணீர் இல்லாததால் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன. எங்கு இருந்துகொண்டு பணியாற்றினாலும் தண்ணீர் அவசியம்தானே. ஓஎம்ஆர் அபார்ட்மெண்ட்வாசிகள் எல்லாம் தற்போது இடத்தைக் காலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இவ்வளவு பெரிய தண்ணீர்ப் பஞ்சத்திற்கு காரணம் நீர் மேலாண்மையில் நாம் விழிப்போடு செயல்படவில்லை என்பதே. அதுபோக, சென்னைக்குப் பிரதானமான அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. நிலத்தடி நீர் சர்வ சுத்தமாக குறைந்து போய்விட்டது. மழை நீர் சேகரிப்பு, நீரை வீணாக்கக் கூடாது, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பதெல்லாம் வெறும் போஸ்டர்களோடு முடிந்துவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.