ஊரடங்கால் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் பலர் வேலையின்றியும், உணவு கிடைக்காமலும் திண்டாடிவரும் நிலையில், குடிபெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காகத் தொடர்வண்டித் துறை சார்பில், ஷ்ராமிக் என்னும் சிறப்பு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
மாணவர்கள், மருத்துவ வசதி பெறவந்த நோயாளிகள், வழிபாட்டு இடங்களுக்கு வந்தவர்கள் எனப் பலர் இத்தொடர்வண்டி மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர்.
தென்னக ரயில்வே சார்பாக மே 1ஆம் தேதி இந்தச் சேவை தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை (மே 29ஆம் தேதிவரை) 3.56 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 13 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இதில் தமிழ்நாட்டிலிருந்து, 11,290 பேர் உள்பட 20,268 பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய இடங்களிலிருந்து தலா இரண்டு தொடர்வண்டிகளும், திருப்பூரிலிருந்து ஒரு தொடர்வண்டியும் இயக்கப்பட்டுள்ளது.