சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எழும்பூரிலிருந்தும், சென்ட்ரலிலிருந்தும் இரண்டு அதிவிரைவு முன்பதிவு வண்டிகள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முழுவதும் முன்பதிவுக்கு மட்டுமேயான பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்க ரயிவே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு கட்டண, பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவிரைவு வண்டியான இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூரிலிருந்து, இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் முற்பகல், 11.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
அதே போல் மறுமார்க்கமாக, 16, 17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து, பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3.40 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.