சென்னையில் மழை நீர் வடிகால் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், மாநகரில் பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இது சம்பந்தமாக சென்னை பெருநகர மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரப்போகும் மழை - பேருந்து நிறுத்தங்கள் எங்கே? இன்னும் ஒன்று (அ) இரண்டு மாதங்களில் வட கிழக்குப்பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால், பல இடங்களில் தோண்டப்பட்டுள்ள குழிகளால், மாநகரப்பேருந்துகளின் நிழற்குடைகள் சேதப்படுத்தப்பட்ட (அ) அகற்றப்பட்ட நிலையில் உள்ளன. சில இடங்களில் நிழற்குடைகள் ஏற்கெனவே இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அவதியுறும் பயணிகள்:சென்னையைப் பொறுத்தவரை சில நாட்களில் மழையும், வெயிலும் பொழிகிறது. நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் சாலையோரங்களில் நின்று பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளதால் பேருந்துகளும் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல இயலவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
பேருந்து நிறுத்தங்களை நவீனமாக்கும் பணி: மாநகராட்சி அலுவலர்களின் கூற்றுப்படி, 'சென்னை நகரத்தில் உள்ள 1,000 பேருந்து நிழற்குடைகளை நவீன துருப்பிடிக்காத ஸ்டீலால் தங்குமிடங்களாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள 844 நிழற்குடைகளை வெப்ப-எதிர்ப்பு கூரைகள் மற்றும் பாதை எண்கள் மற்றும் நிறுத்தங்களின் பெயர்களைக் கொண்ட, டிஸ்ப்ளே பேனல்கள் ஆகியவற்றைச்சேர்க்கும் வகையில் புதுப்பிக்கும் பணி என இந்த திட்டத்தில் அடங்கும்' எனத் தெரிவித்தனர்.
பணிகளை துரிதப்படுத்தக்கோரிக்கை:இதுகுறித்து தினசரி பேருந்து பயணி, ஜார்ஜ் நம்மிடம் கூறுகையில், "அரசு இந்த மழை நீர் வடிகால் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். இந்த இடத்தில் மட்டுமல்லாமல் நகரத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. தற்போது, வெயில் அதிகமாக உள்ளது.