கரோனா வைரஸ் பாதிப்பால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. மீண்டும் பழையபடி மீண்டு வருவதற்கு, ஓர் ஆண்டுக்கும் மேலாகும் என தொழில் நடத்துபவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ’லகு உத்யோக் பாரதி’ எனப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுவரும் நாடு தழுவிய அமைப்பு, தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக, இந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவர் ஹரிஹரன் ராமமூர்த்தி, சென்னை மண்டல தலைவர் வேற்.செழியன் ஆகியோர், தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் பெஞ்சமினை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள்
- சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் வெவ்வேறு மாவட்டங்களில் சிக்கியிருப்பதால் பல இடங்களில் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப பாஸ் வழங்கப்பட வேண்டும்.
- பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், 24 மணி நேரமும் செயல்பட தேவையிருக்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.
- ஜூன் 30ஆம் தேதிவரை மின்சார கட்டணம் செலுத்துவதை ஒத்திவைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
- சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளான விழுப்புரம், ராணிப்பேட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேலை செய்யும் நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும். தேசிய விடுமுறை நாள்கள், கட்டாய விடுமுறை நாள்களிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இப்படி பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் தமிழ்நாடு அரசிடம் முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் பரவல் - முடங்கிய நெசவுத் தொழில்!