சென்னை: மருத்துவக் காரணங்களை காட்டி சிவசங்கர் பாபாவை ஜாமீனில் எடுக்க அவரது தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வந்த சிவசங்கர் பாபா:
டெல்லியில் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா-வை சி.பி.சி.ஐ.டி போலீசார் விடிய விடிய தொடர் விசாரணை நடத்தி தற்பொழுது அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தபின் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்கின்றனர்.
சிவசங்கர் பாபா மீது எழுந்த புகார்கள்:
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார். மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில், 3 தனிப்படைகள் அமைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிவசங்கர் பாபா கைது நடவடிக்கை:
சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி ஜனனி, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 11 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் தனிப்படையொன்று டேராடூனுக்கு விரைந்தது. மற்ற இரு குழுக்கள் சுஷில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்றும், புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றும் சிவசங்கர் பாபா-விற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.