தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருத்தணிகாசலம் பிணை மனு தள்ளுபடி! - திருத்தணிகாசலம்

சென்னை: திருத்தணிகாசலம் போன்றோரை பிணையில் விடுவித்தால் அவரை போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துவிடும் என அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

doctor
doctor

By

Published : May 19, 2020, 12:50 PM IST

கரோனா பரவலைத் தடுக்க மருந்து கண்டுபிடித்தது எனக்கூறியது; முதலமைச்சர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளை குணப்படுத்தியதாகக் கூறியது; சுகாதார நிறுவனம் பற்றி அவதூறு எனப் பல புகார்கள் குவிந்த நிலையில், போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்திற்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை புகார் அளித்திருந்தது.

இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துறையினர் திருத்தணிகாசலத்தை தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், அரசுக்கு எதிராகத் தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்புச் சட்டத்தின் கீழும், மே 6ஆம் தேதி கைது செய்து, பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைத்தனர். அவரை 4 நாட்கள் மத்திய குற்றப்பிரிவு காவலில் எடுத்து விசாரித்த நிலையில், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில், அவரின் பிணை மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தான் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றதாகக் கூறியதில்லை என்றும், பச்சிலை மற்றும் மூலிகைகள் மூலம் பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதாக திருத்தணிகாசலம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த மூலிகை மூலமான நிவாரணங்களையே கரோனாவுக்கான மருந்தாக மக்களிடம் பிரபலப்படுத்தியதாகவும் வாதிடப்பட்டது.

கரோனாவால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை லாபம் ஈட்டும் நோக்குடன் திருத்தணிகாசலம் பயன்படுத்தி உள்ளதாகவும், 1998ஆம் ஆண்டில் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பெற்றதாக வைத்திருக்கும் சான்றிதழ் போலியானது எனவும், அவரிடம் இன்னும் விசாரணை முடியவில்லை என்றும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரோஸ்லின் துரை, கரோனா பரவல் குறித்து தவறானத் தகவலைப் பரப்பி வருவதைக் கருத்தில் கொண்டும், தனது வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலேயே சிகிச்சை அளிப்பதாகக் கூறுவதையும் கருத்தில் கொண்டும், தற்போதைய நிலையில் திருத்தணிகாசலத்தை பிணையில் விடுவித்தால், அவரைப் போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துவிடும் என்பதாலும், பிணை மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இதனையடுத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணை கேட்டு திருத்தணிகாசலம் மனு தாக்கல் செய்யவுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை ஆசாமி கைது!

ABOUT THE AUTHOR

...view details