சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், "பெத்தேல் நகர், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கிராம நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்யும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று, தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் பட்டா வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக்கூறி, பெத்தேல் நகர் குடியிருப்பு பகுதியிலிருந்து காலி செய்யுமாறு, தங்களுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதாகவும், மின் கட்டணம், வீட்டுவரி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தி பல ஆண்டுகளாக தாங்கள் குடியிருப்பதால், தங்களுக்கு பட்டா வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு, பட்டா கோர உரிமையில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெத்தேல் நகரில் ஒரு சிலர் மட்டுமே தொடக்கத்தில் இருந்து அங்கு வசிப்பதாகவும், மற்றவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியவர்கள் என்பதால், பட்டா வழங்கினால் ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது போல் ஆகும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.