சென்னை: பாலியல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சிவசங்கர் பாபாவின், இரண்டு பிணை மனுக்களை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றமும், மாவட்ட முதன்மை நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
இதையடுத்து இரு வழக்குகளில் பிணைகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வந்தது.
அப்போது, புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2015, 2018, 2020ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்தப் புகார்களில், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
புகாரில் உண்மைத் தன்மை இல்லை
மேலும், புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து சென்ற பிறகும், 20 நடன நிகழ்ச்சிகளை சிவசங்கர் பாபாவின் பள்ளியில் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த, 2015ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி ஒருவர், 2019ஆம் ஆண்டு பாபா குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்த கருத்துகளும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.