சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்பதால், அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் மூன்று மணி வரை திறந்த வெளியில் பணி செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.