அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் மக்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரம், பிரபலங்களின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுப் பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறி வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காட்சிப்பதிவுகளை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.