மாநில வளர்ச்சி கொள்கைக்குழு சார்பாக “அறிவியல் தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணித ( STEM ) கல்வியில் பாலின ஏற்ற தாழ்வு குறைகளை களைதல்” தொடர்பான கருத்தரங்கு, மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு துணைத்தலைவர் சி. பொன்னையன் தலைமையில் காணொலி வாயிலாக மனிதவள மேம்பாட்டு அரங்கு, எழிலகத்தில் நடைபெற்றது.
அப்பொது அவர், மாநிலங்களின் வரவு, செலவு திட்ட பங்களிப்பு ஆதாரங்கள், ஒதுக்கீடுகளில் பெண், ஆண் பாகுபாடுகள் இருப்பதை அறிய முடிகிறது. தமிழ்நாட்டின் மாநில மக்கள் தொகையில் 49.9 விழுக்காடு பெண்கள் இருந்தாலும் சமூக செயல்பாடுகளால் பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
மேலும் 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்ற பெண்கள் எண்ணிக்கை 73.86 சதவீதமாகவும் ஆண்கள் எண்ணிக்கை 82.14 ஆகவும் உள்ளது. இதுபோல பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 33.7 விழுக்காடாகவும், ஆண் தொழிலாளர்களின் பங்களிப்பு 77.7 விழுக்காடாகவும் உள்ளது.
எனவே பெண்களின் பங்களிப்பை விரைந்து ஊக்கப்படுத்தி பாலின ஏற்ற தாழ்வை குறைத்து முன்னேறச் செய்வதன் வாயிலாக மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பெற இயலும். தமிழ்நாட்டின் 2020-21 மொத்தம் வரவு செலவு திட்டத்தில் 38.83 விழுக்காடு உத்தேசமாக பெண்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியாகும்.
இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமானது தமிழ்நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பாடங்களிடையே கல்வி, பணிகள் தொடர்பான பாலின ஏற்ற தாழ்வு குறைகளை களைவது, பாலின இடைவெளி தொடர்பான சிக்கல்களை அடையாளம் காண்பதாகும். மேலும் இது தொடர்பாக தொழில் நுட்பக்கல்வி வழங்குனர்கள், துறை தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினர் செயலர் "அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித ( STEM ) ஏற்ற தாழ்வு குறைகளை அயைாளங்கண்டு தமிழ்நாட்டில் பெண்கள் மத்தியில் வளரச்சியை உறுதி செய்வதை வலியுறுத்தினார். மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு துணைத்தலைவர் சி. பொன்னையன் தனது தலைமையுரையில், இளம் பெண்கள், ஆண், பெண் பாலின ஏற்ற தாழ்வுகள் குறைப்பது குறித்த விழிப்புணர்வும், படிப்பில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதங்களுக்கிடையே பாலின ரீதியான பேதங்களை களைய கவனம் செலுத்துவது, அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள, அதற்கான முயற்சியில் ஈடுபடுவது மற்றும் சமூக பண்பாடு பழக்க வழக்கங்களை கருத்தில் கொண்டு தங்களுடைய திறமைகள், விருப்பத்தேர்வுகள், நோக்கங்களை அடைய பெண்களின் பங்களிப்பு அவசியமானது என வலியுறுத்தினார்.
தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் கே. விவேகானந்தன் "தமிழ் நாட்டில் தொழில் நுட்ப கல்வியில் பெண்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு விளக்க காட்சியை ( Power Point Presentation ) வழங்கினார். அதில் தமிழ் நாட்டின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான யுத்திகள் குறித்து இடம் பெற்றன. மேலும் விளக்க காட்சியில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித ( STEM ) கல்வி பாலின ஏற்ற தாழ்வு குறைப்பது தொடர்பான முறைகளை விளக்கினார்.
இதையும் படிங்க: டி.கே. சிவக்குமார் மகளுக்கு இன்று நிச்சயதார்த்தம்!