சென்னை:வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வழியாகப் பல்வேறு வழித்தடங்களில் கள்ளச்சாராயம் கடத்தப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் சந்தேகத்துக்கு இடமான பல்வேறு வழித்தடங்களில் கடந்த 10 நாள்களாகத் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 24) காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த கன்டெய்னர் லாரியை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் கன்டெய்னர் லாரி முழுவதும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 21 ஆயிரம் லிட்டர் அடங்கிய 600 கேன் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றைப் பறிமுதல்செய்த மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் கன்டெய்னர் லாரியை ஓட்டிவந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலேந்திர சிங் (34) என்ற ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.