தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பூலித்தேவன், பொன்பரப்பி தமிழரசன், அனிதா நினைவேந்தல் - சீமான் சூளுரை - சீமான் பேட்டி

பூலித்தேவனின் 306ஆம் ஆண்டுப் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசனின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், கல்வி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த அனிதாவின் 4ஆம் ஆண்டு நினைவுநாளுமான இன்று (செப். 1) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

seeman pay condolence for neet anitha
seeman pay condolence for neet anitha

By

Published : Sep 1, 2021, 8:52 PM IST

சென்னை: பூலித்தேவன், பொன்பரப்பி தமிழரசன், அனிதா நினைவேந்தல் நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், "வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டுப் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான 'நீட்' தேர்வுமுறையை ஒழிக்கச் சட்டத்தின் வழிநின்று போராடி, கல்வி உரிமைக்காகத் தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளுமான 01-09-2021 அன்று கட்சித் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமையேற்ற சீமான், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மூவரின் திருவுருவப் படங்களுக்கு முன்பு நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறியதாவது,

பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம்

தமிழ்ப்பேரினத்தின் வீரமிகு பெரும்பாட்டனார் பூலித்தேவனார் நினைவைப் போற்றுகின்ற நாள் இது. அந்நிய ஆதிக்கத்தின் கீழே, அன்னைத் தமிழினம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையானவர். அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்களுக்கு நாமும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட முடியும் என்ற நம்பிக்கையே பிறந்தது.

வாளும், வேலும் ஏந்திய படையைக்கொண்டு தன் மண்ணின் மீது போரைத் தொடங்கிய இடம் வரைக்கும் ஆங்கிலேயரைப் புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டியடித்து வென்ற வீரப்பெரும்பாட்டனார் பூலித்தேவனார் நினைவைப் போற்றி, அவருக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவதில் மானத்தமிழினப் பிள்ளைகள் நாங்கள் பெருமிதமும் திமிரும் அடைகிறோம்.

வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டும். எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் படிப்பிக்கும். அதனைத்தான் எங்கள் உயிர்த்தலைவர் 'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி!' என்கிறார்.

எங்கள் முன்னோர்களது, 'அடிமை வாழ்வினும் உரிமைச் சாவு மேலானது!' என்ற உயரிய கோட்பாட்டினை ஏற்று வாழும் பிள்ளைகள் நாங்கள், பாட்டனாரின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் அவரைப்போலவே தமிழர் நிலத்தை, வளத்தை, தன்மானமிக்கத் தமிழினத்தின் நலத்தைக் காக்கப் போராடுவோம் என்ற உறுதியை ஏற்கிறோம்.

தமிழ்த்தேசியப் போராளி தமிழரசனுக்கு வீரவணக்கம்

அந்தவழிவழியே வந்த வீரத்தமிழ் மறவர்களில் ஒருவர் பொன்பரப்பியில் பூத்த புரட்சிமலர், தமிழ்த்தேசிய இனத்தின் போராளி, எங்களைப் போன்ற பிள்ளைகளின் முன்னத்தி ஏர், மூத்த வழித்தடம், அண்ணன் தமிழரசன்.

மற்ற தேசிய இனங்களைப் போலத் தமிழினமும் வலிமைப்பெற்று, உரிமைப் பெற்று, பெருமையோடு வாழ்ந்துவிடாதா என்று ஏங்கியவர்களில் முதன்மையானவர், அண்ணன் தமிழரசன்.

சாதியை ஒழிக்காமல் தமிழ்ச்சமூக ஒருமை இல்லை. தமிழ்ச்சமூக ஒருமை இல்லாது அரசியல் வலிமை இல்லை. அரசியல் வலிமை இல்லாது அதிகார வலிமை இல்லை. அதிகார வலிமை இல்லாமல், தேச விடுதலை இல்லை என்கிறப் புரிதலோடு பெரும்படை கட்டியெழுப்பிய புரட்சியாளன் தமிழரசன்.

அவருடைய பாதையில் பயணிக்கின்ற, அவர் உடன்பிறந்தார்களாகிய நாங்கள் அந்த வீரத்தமிழ் மறவனுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவதில் பெருமையடைகிறோம்.

கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா நினைவைப் போற்றுவோம்

தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்னைப்போல இந்தச் சூழ்நிலை வேறெந்த மாணவப் பிள்ளைகளுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தீக்குச்சியாக மாறிய புரட்சிக்காரி. அந்த எளியமகள் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாட்டில் பேரதிர்வைத் தந்தது. ஆனால், இன்றுவரை அந்த 'நீட்' தேர்வின் கொடுமையை ஒழிக்க முடியவில்லை.

கல்வி உரிமைக்காகத் தன்னுயிரைத் தந்த தங்கையின் பெருங்கனவை அவரது உடன்பிறந்தார்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து போராடி எதிர்வரும் காலத்தில் இனிவரும் பிள்ளைகளுக்கு அந்த 'நீட்' கொடுமைகள் நேராமல் கல்வி உரிமையைப் பெற்றுக்கொடுப்போம் என்ற உறுதியை ஏற்பதுதான் நாங்கள் தங்கைக்குச் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்கும். அவ்வீர மங்கை, என் அன்புத்தங்கை அனிதா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது.

நீட் தேர்வும் அரசியலும்:

அடிப்படையில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டங்களை மத்திய அரசு மதிப்பதில்லை. இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். மற்ற மாநில முதலமைச்சர்களை, குறிப்பாகத் தென்மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து அவர்களது மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தம் தரவேண்டும்.

நீட் தேர்வின் மூலம் மதிப்பெண் குறைவான மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று வருகின்றனர். வடமாநிலங்களில் முறைகேடான வழிகளில் தேர்ச்சியடைகின்றனர். எனவே, நீட் தேர்வு தகுதியற்ற மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குகிறது.

மருத்துவ மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் நீட் தேர்வு எழுதாதவர்கள்தானே. தமிழ்நாட்டில் அரசு சட்ட முன்வடிவை கொண்டு வருவதை வரவேற்கிறோம். ஆனால், அது போதாது. அனைத்து மாநில முதலமைச்சர்கள் ஆதரவையும் பெற முயல வேண்டும்.

தமிழில் பெயரின் முதல் எழுத்து:

பெயரைத் தமிழில் எழுதுவதையும், பெயரின் முதல் எழுத்தைத் தமிழில் இட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நீண்ட நாட்களாக நாம் தமிழர் கட்சி பேசி வருவதைத்தான் தற்போது தமிழ்நாடு அரசு செயல்படுத்த முனைகிறது. அந்த முயற்சியை வரவேற்கிறோம்.

காங்கிரஸ்-பாஜக இரண்டிற்கும் ஒரே கொள்கை:

காங்கிரஸ் கட்சித்தலைவர் அனுப்பிய ராணுவம் ஈழத்தில், என் அக்காள் தங்கைகளை ஆயுதங்களாலேயே கொடுமைப்படுத்தி வன்புணர்வு செய்து கொலைசெய்தபோது, ஏன் தங்கை ஜோதிமணி வாய்திறக்கவில்லை? அது பாலியல் வன்புணர்வு இல்லையா?

தங்கை ஜோதிமணி என்னிடம் கேள்வி எழுப்புவதை விடுத்து, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது வேகமாக நடவடிக்கை எடுத்ததுபோல், ராகவன் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உங்கள் கூட்டணி முதலமைச்சரான ஸ்டாலினிடம் முதலில் கேள்வி எழுப்புங்கள். எனக்குப் பக்கம் பக்கமாக எழுதுவதுபோல் ராகவனுக்கு தங்கை ஜோதிமணி ஏன் கேள்வி எழுப்பவில்லை?

இவர்களுக்குப் பிரச்னை கே.டி.ராகவனோ, காணொளியோ இல்லை. சீமான்தான் பிரச்னை. அதனால் தான் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார்கள். எங்களை 'பீ டீம்' என்று விமர்சிக்கும் தங்கை ஜோதிமணி, 'ஏ டீம்' என்று சொல்லும் பாஜகவை இத்தனை கேள்விகள் எப்போது கேட்டுள்ளார்?

காஷ்மீர் விவகாரம், ராமர் கோயில், சிஐஏ, நீட், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தல், சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட எதுவொன்றில் பாஜகவைக் கடுமையாக எதிர்த்துள்ளார்? அவற்றையெல்லாம் எதிர்க்கமாட்டார்கள். ஏனெனில், இந்தத் திட்டங்களையெல்லாம் பெற்றெடுத்தது காங்கிரஸ், பெயர் வைத்து வளர்த்தெடுத்தது பாஜக.

காங்கிரஸ்-பாஜக இரண்டிற்கும் கட்சிப் பெயரில் தான் வேறுபாடே ஒழிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. இவர்கள் கதர் கட்டிய பாஜக, காவி கட்டிய காங்கிரஸ். இவர்கள் மென்மையான இந்துத்வா, வன்மையான இந்துத்வா" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

உயிருடன் விளையாடக்கூடாது

அதே நேரத்தில், விநாயகர் சதுர்த்தி நடத்துவது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த சீமான், "அவருக்கும் கரோனா வரும். அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். உயிருடன் யாரும் விளையாடக் கூடாது" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details