நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள மலை மீது அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள பகுதியில் கிரிவலப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்செங்கோடு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்யவும் அப்புறப்படுத்தவும் 34 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் திடக்கழிவு சேகரிப்பு நிலையத்தை, கிரிவலப்பாதைக்கு அருகில் அமைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.
கிரிவலப்பாதையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதுடன், திருச்செங்கோட்டிற்கு நீராதாரமாகத் திகழும் மலையடிக் குட்டை அருகிலேயும் இத்திடக்கழிவு சேகரிப்பு நிலையத்தை அமைக்க இருப்பதால் சுற்றுச்சூழல் கெடுவதுடன், சுகாதாரமின்மையும் அதிகரிக்கும் என இதற்கு தடைவிதிக்கக் கோரி திருச்செங்கோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அடையாளம் காட்டியுள்ள ஏழு இடங்களும் அரசு புறம்போக்கு நிலங்களும் ஏராளமாக உள்ள நிலையில், கோயில் அருகில் வளங்களை அழித்து குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மனுவில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.