சென்னை:திருப்பூர் மாவட்டம் உடையர்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பன்னீர்செல்வம் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வகுரம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பெரியசாமி என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் சின்னக்கமையம்பட்டு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோவிலிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ரமேஷ் என்பவரும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பூர் மாவட்ட கோவிலுக்கு அனுமதி கோரி காவல்துறையில் விண்ணப்பித்த அன்றே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு போதிய அவகாசம் வழங்காமலும், நீதிமன்றத்தில் ஆதாரங்களை மறைத்தும் தொடரப்பட்ட வழக்கு என கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அந்த அபராத தொகையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதைபோலவே மற்ற இரு மனுக்களும் காவல்துறை பரிசீலிக்க அவகாசம் வழங்காமல் தொடரப்பட்ட வழக்குகள் எனக் கூறி அந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சா..?- கேள்வி கேட்கும் அரசு ஊழியர்கள்